“நான் உயிர் பிழைப்பேனா?” – பூகம்பத்தில் தப்பிய பெண் அதிர்ச்சி!

நான் உயிர் பிழைப்பேனா?

பாங்கொக்: வழமைக்கு மாறான ஓர் இரைச்சல். ஏதோ தவறு நடக்கிறது என்று எண்ணினாள் சிட் தாயி. பல்கலைக் கழகத்தின் ஐந்தாம் மாடியிலிருந்த அவளுக்குக் கீழ்த்தளத்திலிருந்து வரும் ஓசை வித்தியாசமாக இருந்தது.

அப்போது நில நடுக்கம் தொடங்கியிருந்தது!

“நான் உடனடியாகக் கீழே ஓடிவிடவேண்டும். இல்லாவிட்டால், நான் உயிர் தப்புவது கடினம் என்று எண்ணினேன். என்னால் உயிர் தப்ப முடியுமா? என்று நினைத்துக்கொண்டோ கீழே ஓடினேன்.” என்கிறார்.

சிட் தாயி வீதியில் ஓடிக்கொண்டிருக்கும்போது அவளிருந்த அந்த மாடிக் கட்டடம் தரைமட்டமாகிப்போனது. இதற்கு முன்னர் நில நடுக்கத்தை அனுபவத்திருந்தாலும் இந்தளவு தாக்கங்கொண்ட நில நடுக்கத்தை உணர்ந்ததில்லை.

வெள்ளிக்கிழமை 28 ஆம் திகதி நள்ளிரவு 12.50 உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.50 இற்கு மியன்மருக்கு அருகில் 7.7 றிக்டர் அளவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டது. நாட்டின் சன நெரிசல் மிக்க நகரத்தைப் புரட்டிப் போட்ட பூகம்பம் தாய்லாந்திலும் சீனாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மியன்மரில் 1700 பேர் கொல்லப்பட்டு 3400 பேர் காயமடைந்திருப்பதாகவும் தொடர்ந்து உயிரப்பலி அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் 30 மாடிக் கட்டடமொன்று தரைமட்டமாகியிருக்கிறது. அதில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோப்ப நாய்கள், ட்ரோன்கள் கொண்டு தேடுதல் பணி நடந்து வருகிறது.

தமது உறவகள் உயிரோடு இருக்கும் என்ற நம்பிக்கையில் 24 மணித்தியாலத்திற்கும் மேலாக வீதியில் மக்கள் காத்திருக்கிறார்கள். பூகம்பத்தை அடுத்து 6.4 றிக்டர் அளிவில் பின் அதிர்வும் ஏற்பட்டிருக்கிறது.

மியன்மரில் 2021 இற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நில நடுக்கம் இதுவாகும். வெள்ளிக்கிழமை நில நடுக்கத்தால் அண்டை நாடான வியட்நாமிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கைக்காக ரஷ்யா மீட்புப் பணியாளர்களை அனுப்பி வைத்திருக்கிறது. மியன்மருக்கு சீனா 100 மில்லியன் யுவான் நிதி அளித்திருக்கிறது. மியன்மரின் இராணுவ ஆட்சியாளர்கள் சர்வதேசத்திடம் உதவி கோரியிருக்கிறார்கள். உலகின் எல்லா நாடுகளும் உதவிக்கு வந்தாலும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்புப் பணி சிக்கலாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மியன்மரில் சிவில் யுத்தம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களை இந்த நில நடுக்கம் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் உதவிக் கரம் நீட்டுவதாக உறுதியளித்திருக்கிறார்.

மதிமுரசு

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025