தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இந்தியா பயிற்சி

தமிழ் ஊடகவியலாளர்கள்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இந்தியா பயிற்சி: இலங்கையிலுள்ள தமிழ் ஊடகர்களுக்கு தொழில்வாண்மைக்கான பயிற்சிகள் தேவைப்படின் அவற்றை வழங்க முடியுமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் ஊடகவியலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் , அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் , ஊடகத் தொழிலை செய்யும்போது அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் , இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்காக நவீன ஊடக பயிற்சிகள் , ஊடகத் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

தமிழ் ஊடகத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவதானமாக கேட்டுக்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் , இந்தியாவில் நடைமுறையில் உள்ள நவீன ஊடக யுக்திகள், அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பிலான பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டார்.

பிராந்திய செய்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்கள் மீதான அடக்குமுறைகள் , விசாரணை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அழுத்தம் , செய்திகள் எழுதுவதால் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இந்த சந்திப்பில் விபரமாக குறிப்பிட்டது.

மட்டக்களப்பு ,கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் மற்றும் மலையகப்பகுதிகளில் ஊடகர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களையும் எடுத்துரைத்தது.அவ்வாறான சந்தர்ப்பங்களில் இராஜதந்திர மட்டங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய தலையீடுகளையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு வீட்டு வசதிகளை செய்வது குறித்தான யோசனையொன்றும் ஒன்றியத்தால் தூதுவரிடம் முன்வைக்கப்பட்டது .அதேபோல் தமிழ் ஊடகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ,பிரச்சினைகள் குறித்து விரிவான மகஜர் ஒன்றும் இந்த சந்திப்பின்போது உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025