ஏர்இந்தியா விமான விபத்தை மறந்திருக்கம மாட்டீர்கள். 200 இற்கும் அதிகமானோர் பலியாக ஒருவர் மட்டும் – 11ஏ – உயிர் தப்பியதும் நினைவிருக்கும்.
இப்போது எதிர்பார்த்ததைவிட அதிக இழப்பைச் சந்தித்ததால் ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது பங்குதாரர்களிடம் நிதி கோரியிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்களைச் சுட்டி புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் முடிந்த நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.22,000 கோடி ( US$2.4 பில்லியன்) இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான போயிங் 787 டிரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கியமை, இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டமை, மத்திய கிழக்கு மோதல் போன்றவை அதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
முன்னதாக, சென்ற நிதியாண்டில் ஏர் இந்தியாவிற்கு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படலாம் என இவ்வாண்டு ஜனவரியில் புளூம்பெர்க் மதிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியாவின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் டாடா நிறுவனமும் அதன் 25.1 விழுக்காட்டுப் பங்குகளைக் கொண்டுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஏர் இந்தியாவிற்குத் தேவைப்படும் நிதியை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
இதுகுறித்த விவரம் கேட்டு அனுப்பிய மின்னஞ்சலுக்கு ஏர் இந்தியாவும் டாடா நிறுவனமும் பதிலளிக்கவில்லை என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பதிலளிக்க மறுத்துவிட்டது என்றும் புளூம்பெர்க் செய்தி தெரிவித்தது.
இப்படிப் பேரிழப்பைச் சந்தித்துள்ள நிலையில், இவ்வாண்டுப் பிற்பகுதியில் ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரிப் பொறுப்பிலிருந்து கேம்ப்பெல் வில்சன் விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மைய ஆண்டுத் தணிக்கைமூலம், பாதுகாப்பு அம்சங்களிலும் ஏர் இந்தியா மோசமான தரநிலையில் இருப்பது தெரியவந்தது.
