காதலியின் நிர்வாணப் படத்தைப் பகிர்ந்தவருக்கு ஆறு மாதம் சிறை

தன் காதலியின் நிர்வாணப் புகைப்படத்தை வட்சப் நண்பர்கள் குழுவுக்குப் பகிர்ந்த இளைஞர் ஒருவருக்குக் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து இன்று (23)தீர்ப்பு வழங்கினார்.

நீண்டநாள் காதலித்து வந்த அந்த இருவரின் உறவும் இன்றைய வழக்குத் தீர்ப்புடன் முடிவுக்கு வந்தது.

முறைப்பாட்டாளரான பெண்ணுடன் ஆரம்பத்திலிருந்து பழகி வந்த இளைஞனுக்கு அண்மையில் நிர்வாணப் புகைப்படமொன்றை அந்தப் பெண் அனுப்பி வைத்துள்ளார். அதனை அந்த இளைஞன் தனது வட்சப் நண்பர் வட்டத்திற்குப் பகிர்ந்துள்ளார்.

விடயம் தெரியவந்ததும் பெண் பொலிஸ் கணிணி குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் பதிவுசெய்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இளைஞன் சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்தக் குற்றத்தைச் செய்ததை இளைஞள் ஏற்றுக்கொள்வதாகவும் அஃது ஆரம்பத்தில் நடந்தது என்றும் இனிமேல் எந்தத் தவறும் நேராமல் இருப்பதை உறுதிசெய்வதாகவும் நீதவானுக்கு எடுத்துரைத்தார்.

சட்டத்தரணியின் கருத்தினை பரிசீலித்த நீதவான், இளைஞனுக்குப் பத்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 75 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்க உத்தரவிட்ட அவர், அபராதமாக 2500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அப்போது நட்டஈட்டுத் தொகையைச் செலுத்த இளைஞனுக்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்குமாறு சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.