சம்மாந்துறை அல்-அர்சத் அதிபருக்கு நெகிழ்ச்சியான கௌரவிப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/சது/அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம். அப்துல் ரஹீம் (SLPS-I) அவர்களின் அரச சேவை ஓய்வையொட்டி, பாடசாலைச் சமூகம் நான்கு நாட்களாகத் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்த பாராட்டு மற்றும் பிரியாவிடை நிகழ்வுகளின் பிரதான விழா நேற்று (05) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சம்மாந்துறை அல்-அர்சத் அதிபருக்கு நெகிழ்ச்சியான கௌரவிப்பு!

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PPA) மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வி நிர்வாக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், சமூகப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை அல்-அர்சத் அதிபருக்கு நெகிழ்ச்சியான கௌரவிப்பு!

பாடசாலையின் பிரதி அதிபர் இசட். மொஹமட் ஸவாஹிர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி நிர்வாகம் மற்றும் பொது முகாமைத்துவப் பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.சி. நுஸ்ரத் நிலோபரா, திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எம். சித்தி பாத்திமா, கல்வி நிர்வாகப் பிரதி கல்விப் பணிப்பாளர் எச். நைறூஸ்கான், இறக்காமம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். சஹீத், பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எம். மொஹமட் சியாத், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளரும் EPSI இணைப்பாளருமான எம்.டி.எம். ஜானோபர் மற்றும் வலயக் கல்வி அலுவலகக் கணக்காளர் எம்.பி.எம். இத்ரீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சம்மாந்துறை அல்-அர்சத் அதிபருக்கு நெகிழ்ச்சியான கௌரவிப்பு!

மேலும், பாடசாலையின் உதவி அதிபர்களான திருமதி மஜீதா தாஸீம், எம்.எம். மொஹமட் ஜெஸீல், சம்மாந்துறை பிரதம நம்பிக்கையாளர் மஜீத் (சத்தார்), மஜ்லிஸ் அஷ்ஷூரா சபையின் தலைவர் ஐ. அப்துல் ஜப்பார், சம்மாந்துறை கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அதிபரின் நீண்டகாலக் கல்விச் சேவையைப் பாராட்டும் வகையில் பிரதான விழாவுக்கு முன்னதாகவே கடந்த திங்கட்கிழமை (02) ஆரம்பப் பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் முதலாவது பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (03) இடைநிலைப் பிரிவு மாணவர்களின் சார்பில் மற்றுமொரு பாராட்டு நிகழ்வும், புதன்கிழமை (04) பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் இணைந்து ஏற்பாடு செய்த பாராட்டு நிகழ்வும் தனித்தனியாக இடம்பெற்றன.

இவ்வாறு ஆரம்பப் பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள், இடைநிலைப் பிரிவு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பல்வேறு தரப்பினரும் அதிபருக்குத் தனித்தனியாகக் கௌரவங்களை வழங்கியமை அவரது சேவைக்கு பாடசாலைச் சமூகம் வழங்கிய அங்கீகாரமாக அமைந்தது.

இன்றைய பிரதான விழாவில் அதிபர் எம். அப்துல் ரஹீம் நீண்டகாலமாகக் கல்வித் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியமை, பாடசாலையின் கல்வி முன்னேற்றம் மற்றும் பௌதிக வளங்களின் அபிவிருத்திக்காக ஆற்றிய பங்களிப்புகள் ஆகியன நினைவுகூரப்பட்டு பாராட்டப்பட்டன.

இதன்போது ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் பொன்னாடை போர்த்தியும், நினைவுப் பரிசுகள் வழங்கியும் அதிபரைக் கௌரவித்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, பாடசாலை ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் அதிபரின் கல்விப் பயணம், அவர் ஆற்றிய சேவைகள் மற்றும் பாடசாலையுடனான நினைவுகளைப் பதிவு செய்யும் வகையில் ‘தடயம்’ எனும் சிறப்பு நினைவு இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நீண்டகாலக் கல்விப் பணியை நிறைவுசெய்து அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் அதிபருக்கு பாடசாலைச் சமூகம் தமது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தது.

மின்மினி மின்ஹா