October 22, 2026 11:02 am
அபராதம் செலுத்த முடியாமல் 1400 கைதிகள் சிறைகளில்!

நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சுமார் 1400 தண்டனைக் கைதிகள், சிறையில் வாடுவதாக நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

10 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் இருக்கும் அந்தக் கைதிகளின் விடுதலைக்குப் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள்.தனியார் நிறுவனங்கள் முன்வந்து உதவ முடியும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுணவர்தன நேற்று (21)சபையில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

தண்டனை விதிக்கப்பட்ட 10,611 கைதிகள், விளக்க மறியலில் உள்ள 28,408 கைதிகள் உள்ளடங்கலாக 39,019 பேர் சிறைகளில் இருப்பதாக அமைச்சர் நாணாயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

ஆர்வமுள்ளவர்கள் முன்வந்து கைதிகளின் விடுதலைக்கு உதவ முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் நாணாயக்கார, விளக்க மறியல் கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியப்பாடுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.