போப் ஆண்டவருக்கு ஜெமெலி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் உலகளாவிய மதத்தலைவராக போப் லியோ(வயது 71) உள்ளார். சமீபத்தில் புனித பேதுரு தேவாலயத்தில் அவர் ஞாயிறு ஆராதனை மற்றும் வழிபாடு நடத்தினார்.
அப்போது புனித பேதுரு சதுக்கத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் போப் ஆண்டவர் தான் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதாவது தனது நுரையீரலில் சிறிய முடிச்சு ஒன்று வளர்ந்து உள்ளதாகவும், அதனை அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.
வழக்கமான பரிசோதனையில் இது ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டதாக அவர் கூறினார். இந்த நிலையில், போப் ஆண்டவருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.
அவருக்கு ஜெமெலி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், நுரையீரலில் இருந்த புற்றுநோய்க்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
