காணி,பொலிஸ் அதிகாரத்துடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சி முறையின் கீழ், அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இதன் மூலம் முடியும் என்று திரு. பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அமிர்தநாதன் அடைக்கலநாதன் கொண்டு வந்த “கறுப்பு ஜூலையின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான விதப்புரைகளைச் செய்வதற்காக சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல்” எனும் தனியார் பிரேரணை விவாத்ததில் நேற்று (09) கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றினார்.
“எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் 83 கருப்பு ஜூலையை ஒரு கருப்புப் புள்ளியாகவே நாம் கருதுகிறோம்.
அதை நான் ஒப்புக்கொள்கிறேன். கருப்பு ஜூலையினால் பாதிக்கப்பட்ட எமது நாட்டின் சமூகத்திடமிருந்து, குறிப்பாக தமிழ் சமூகத்திடமிருந்து, அதற்காக வருத்தத்தை தெரிவிப்பது மட்டுமன்றி, அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக, அந்தப் பாதிப்புக்குள்ளான அனைவருக்காகவும் ஒரு நாடாக நாம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எமது நாட்டின் பெருமளவிலான குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் நல்லிணக்கத்தின் பெயராலும், சகோதரத்துவத்தின் பெயராலும் எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அழைக்கிறோம்.
மீண்டும் மீண்டும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம், அதே போல் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக, இந்த விவாதத்தில் பெரும்பான்மையினம், சிறுபான்மையினம் என்று பேசுவதை நான் கேட்டேன். எமது நாட்டில் பெரும்பான்மையினம், சிறுபான்மையினம் என்றில்லை,
நாம் புரிந்துகொள்ள வேண்டியது ‘இலங்கையர்’ என்பதாகும். முற்போக்குத் தேசியவாதத்திற்காக முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி, அந்தஸ்து பேதங்களின்றி, ஒற்றையாட்சி நாட்டில் எமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாத்து ஒரு நாடாக நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இந்நாட்டில் பிரதானமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முன்வைக்கப்பட்ட பிரதான யோசனையே 13 ஆவது திருத்தமாகும்.
இந்நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை, பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அந்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றுவோம்.
அதுமட்டுமன்றி, மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அதை நடத்தாதிருப்பது மக்களின் இறையாண்மைக்கும் வழங்கப்படும் மரண அடியாகும்.
அதேபோல, காணிகளை இழந்த மக்களுக்கு காணிகளை வழங்கும் நடவடிக்கை உடனடியாக இடம்பெற வேண்டும்.
ஒருபுறம் தேசிய பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வகையிலும், மறுபுறம் காணிகளை இழந்த மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும் இது இடம்பெற வேண்டும்.
ஏதேனும் காரணத்தினால் ஒரு குறிப்பிட்ட காணிப் பகுதியை வழங்க முடியாதுபோனால், சந்தை மதிப்பீட்டிற்கு ஏற்ப குறைந்தபட்சம் நஷ்டஈடாவது வழங்கப்பட வேண்டும்.
இறுதியாக, இந்த சந்தர்ப்பத்தில் கூற விரும்புகிறேன், குறிப்பாக எமது கபீர் ஹாஷிம் அவர்களின் அன்புமகள் சாரா கபீர் அவர்களால் ‘Tear Drop Nation’ என்ற சிறந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சபையிலுள்ள 225 பேருக்கும் நாட்டின் மக்களுக்கும் தங்களின் சொந்தக் கருத்துக்கள் எத்தனையோ இருக்கலாம், அதிலுள்ள கருத்து தொடர்பில் எனக்கும் முரண்பாடான கருத்துக்கள் உள்ளன.
எனினும் அதைச் சற்றுப் பார்வையிடுமாறு நான் யோசனை தெரிவிக்கிறேன். ஏனெனில் சிறுபான்மையினம், பெரும்பான்மையினம், அந்த இனம், இந்த இனம் என்றன்றி, நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்தவும், இலங்கை தேசத்தின் பலமிக்க பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்தவும் நாம் அனைவரும் கைகோப்போம் என்று நான் யோசனை முன்வைக்கிறேன்.”
