‘ஆடும் பாடும் தேடும் யாவும் கண்ணே உன் முகமே!
காதல் காவியமே! புது காதல் காவியமே!’
இலங்கை வானொலியொடு தொடர்புள்ள யாவருக்கும் இந்த மெல்லிசைப் பாடல் நினைவிருக்கும்.சரத் விக்கிரமவின் இசையில் அண்ணன் வீ. முத்தழகு பாடியது. (‘கு’ என்று முடிவதால் அஃது அசிங்கம் என்று சிங்களவர்கள் அவரது பெயரை சூரியகுமார் முத்தழகே! என்று வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘தெமள’ என்றால் அசிங்கம் என்று நமக்குத் தெரியாவிட்டாலும் சிங்களவர்களுக்குத் தெரியும்)
மிக அருமையான பாடல். அண்ணன் முத்தழகுவைச் சந்திக்கும்போது மறக்காமல் இந்தப் பாடலையும் பாடச் சொல்லிக் கேட்கும் அளவிற்கு அந்தப் பாடல் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு.
அழகான வரிகள்;அருமையான இசை. இந்தப் பாடலை இயற்றியவர் கலாபூசணம் எம்.என்.ராஜா. அவருக்கு இன்று (07) பிறந்த நாள். அவர் பிறந்த நாளில் அவரையும் அவர் இயற்றிய பாடலையும் நினைவுபடுத்திக்கொள்வதில் ஓர் ஆனந்தம்!
1990 களின் நடுப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நுழைவாயிலில் அறிவிப்பாளர் அன்பர்கள் சிலருடன் நின்று அளந்துகொண்டிருந்தபோதுதான் அவ்விடத்திற்கு ராஜா வந்தார், ராஜ நடையில்.
இவர்தான் எம்.என்.ராஜா என்று யாரும் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ரூபவாஹினி செய்தியில், இசை நிகழ்ச்சிகளில் பார்த்த முகம்தானே என்று பளீச்செனத் தெரிந்தார். (இப்போது சிலர் “என்னைத் தெரியவில்லையா?” என்று தெரிந்தவர்களுக்கே சொல்லும் அவலம்).
ஒலிபரப்புக்கூட்டுத்தாபன கண்டீனுக்குச் சென்று அங்கும் அளந்துவிட்டுச் சென்றுவிட்டோம். அதன் பின்னர் 2002இலிருந்து நேத்ராவில் செய்தித்தாள் கண்ணோட்ட நிகழ்ச்சியின்போது, நிகழ்ச்சி முடிந்து கண்டீனுக்குச் செல்வது வழக்கம்.
அந்தச் சந்தர்ப்பத்தில், எல்லோருக்கும் அவர் உபயத்திலேயே பால் தேநீர் வாங்குவார்.(சிலவேளைகளில் சிற்றுண்டி அல்லது காலைச்சாப்பாடும் சேர்த்து)
அப்போது ஒருநாள், மெல்லிசைப் பாடல்களைப் பற்றிய கதை வந்தது. எனக்கு ஜோசப் இராஜேந்திரன் அண்ணையையும் நிரம்பப் பிடிக்கும். அவர் எம்மோடு அதிகம் பேசாவிட்டாலும், அவரோடு எல்லாம் இருக்கிறோமே என்ற மகிழ்ச்சி மேலோங்கியிருக்கும்.
அவர் பாடிய,
‘ஒரு கோடி மலராலே
உனைப் போற்றித் துதித்தாலும்
ஏனிந்த பாராமுகம்..தேவி
என்னதானோ காரணம்..
உள்ளத்தில் அன்பு வீணை
ஏற்றி வைத்தேன் வாணி!
கருணை புரிந்திட வா நீ!’
என்ற பாடலும் எனக்கு நிரம்ப பிடிக்கும். அந்தப் பாடலைப் பற்றி நான் ராஜா அண்ணாவிடம் சொன்னபோது, அதை ஜோசப் இராஜேந்திரன் இயற்றி, அவரே பாடியது என்றார். அப்போது வானொலியில் ‘அசலும் நகலும்’ என்றொரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது.
அதில் ஏ.எம்.ராஜா பாடியதையும் ஜோசப் ராஜேந்திரன் பாடியதையும் ஒலிபரப்பி, அசல் எது, நகல் எது? என்று கேட்பார்கள். அப்படி அச்சொட்டாக ஏஎம் ராஜா மாதிரியே ஜோசப் ராஜேந்திரன் பாடுவார்.
எம்.என்.ராஜாவுக்குக் குரு என்று அவரைச் சொல்லிக்கொண்டே ‘ஆடும் மயிலும் தேடும் யாவும் கண்ணே உன் முகமே’ என்று பாடுகிறார்.
“ஐயோ! இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடலே!” என்றபோதுதான். அதை இயற்றியது தானே என்றும் பாடியது முத்தழகு அண்ணா என்றும் சொன்னார்.
அந்தப் பாடல் மட்டுமல்ல எத்தனையோ பாடல்களை இயற்றியிருக்கிறார் எம்.என்.ராஜா. (சிலருடைய பெயர் இனிஷியல் சேர்த்தே பிரபலமாகும். அப்படித்தான் எம்.என்.ராஜாவும் – எம்.என்.ராஜம், எஸ்.வி.சேகர், வைஜி மகேந்தின்- இனிஷியலும் சேர்த்து ஒட்டிக்கொண்டது. இஃது எல்லா ராஜாக்களுக்கும் அமையாது.
எம்என் பாடல் இயற்றுவதுபோல் எனக்கும் ஆர்வம் இருக்கிறது. நான் எழுதிய ஒரு பாடலை கீழ்கரவை குலசேகரன் எழுதியதாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்றேன். அந்தத் தகவலைச் சொன்னர் இசையமைப்பாளர் சிவசங்கர் கணேசன்.
அப்போது என் பாடலை அவர் பாடியதாகவும் வரிகள் குலசேகரனைப்போன்று இருக்கவும் அவர் பெரையப் போட்டு வைத்ததாகவும் கூறி அந்தப் பாடலை முழுவதும் பாடியும் காண்பித்தார். அது வேற விடயம்.
ஆடும் மயிலுக்கு வருவோம்…
அந்தப் பாடலைப் பின்னாளில் தொலைக்காட்சிக்காகத் தயாரித்தபோது, காதல் பாடலைத் தத்துவப் பாடலாக மாற்றிய கதையைச் சொன்னார் எம்என்.
எப்படி என்றேன்,
‘ஆடும் பாடும் மயிலும் குயிலும்
ஆனந்தமாய் வாழுது
ஆறறிவு படைத்த நாம் – வெறும்
ஆசையில் மூழ்கினோம்
ஓடும் நதியும் வீசும் காற்றும்
விலையா கேட்குது
சேவை புரியலையா
பொது சேவை புரியலையா’
புல்லரித்துப்போய்விட்டது! எவ்வளவு ஆழமான அழகான தத்துவ வரிகள் என்று பாருங்கள். இவற்றையெல்லாம் நம் பொக்கிஷங்களாகப் பேண வேண்டாமா? தமிழர்கள் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடும் மனப்பாங்கைக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.
மெல்லிசைப் பாடல்கள் அத்தி பூத்தாற்போல் அன்றி, அடிக்கடி ஒலிக்க வேண்டும்.
‘புது ரோஜா மலரே நீ
புன்னகையோ உன்னிடத்தில்
கதை பேச வைக்குதடா’ – ஷெல்லிதாசன்
அழகான ஒரு சோடிக் கண்கள்- அவை
அம்புகள் பாய்ச்சி என்
உளமெல்லாம் புண்கள் – பாவலர் பஸீல் காரியப்பர்
இப்படி மனத்தை வருடும் பாடல்களை மறக்கவே முடியாது.
அண்மைய நாள்களில் ஜெயந்தி ஜெய்சங்கர் எழுதிய
“வெள்ளை நிறம் கொண்ட போகன்விலா…
சில்லாலையா உந்தன் ஊரு, நீ
சொல்லாலே மயக்கிற ஆளு! என்ற பாடலும் என்னைப் பிடித்துக்கொண்டது.
எம்.என்.ராஜாவின் ஆளுமையை மீட்டும் சந்தர்ப்பத்தில் மெல்லிசைப் பாடல்களும் நினைவுக்கு வந்துபோயின.
ரூபவாஹினி தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், நடப்பு விவகாரப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், செய்தி வாசிப்பாளர்,தயாரிப்பாளர், வானொலி அறிவிப்பாளர், கிரிக்கெட்டு வர்ணனையாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக ஆளுமைகொண்ட ராஜா தமிழுக்கு ஆற்றிய வகிபாகம் அளப்பரியது.
எப்போது தொடர்புகொண்டாலும் இப்போதைய ஊடக நிலையைச் சொல்லி வருத்தப்படுவார்.
ஏழு முப்பது மணிக்கு…எல்லோருக்கும் வனக்கம்! இன்னைக்கு என்ன பார்க்கப்போறம் அப்டீனு பார்த்தீங்கன்னா,இங்கு வந்திருக்கக்கூடிய பெரியவர்களுக்கு வணக்கங்கள், நன்றிகள்…
இப்படி எல்லாம் நம் ஊடகவியல் நாசமாய்ப்போச்சே என்று வருத்தமும் வேதனையும்படுவார்.
சிலவேளைகளில் நிகழ்ச்சியின்போது எனக்கு அம்பாறை ‘பீ’ யாக ஒலிக்கும். வெளியே வந்ததும், அஃது அம்பாறை அன்று, அம்பாறை பி பி என்பார்.
அந்தக் காலப்பகுதியில் எம்மொடு பணியாற்றிய ஓர் அன்பர் ‘மக்கள்கள்’ என்பார். அவருக்கு எத்தனை தடவை சொல்லியும் கேட்கிறார் இல்லையே என்று ஆதங்கப்படுவார் ராஜா!
அவரை தமிழ் ஊடகத்துறை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை.
எம்.என்.ராஜா அண்ணா இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். அவருக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
விசு கருணாநிதி
.
