நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டுசெல்ல எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் வர்த்தகர்களும் இன்று (07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா தபாலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் மேற்கொண்டார்கள்.
இந்தக் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்களும் வர்த்தகர்களும்:
நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்வதற்கு தங்களுக்கு எதிர்ப்பு இல்லை எனவும், எனினும் தற்போது மாநகர சபையின் கீழ் சிறப்பாக இயங்கி வரும் இப்பிரிவை அமைச்சின் கீழ் ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நீர்வளப் பிரிவு தொடர்ந்து மாநகர சபையின் கீழ் இயங்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சுமைகளை குறைக்க முடியும் எனவும், மாநகர சபைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள்,தொழில்நுட்ப அறிவை வழங்கி, நீர் விநியோக சேவையை மேலும் மேம்படுத்த முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், மாநகர சபையின் நீர்வளப் பிரிவும் அதனுடன் தொடர்புடைய சொத்துகளும் அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டால், மாநகர சபைக்கு கிடைத்து வரும் வருமானத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும், இதனால் எதிர்காலத்தில் நிர்வாக ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



அத்துடன், மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானங்கள் உரிய முறையில் வசூலிக்கப்படாமல் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நிலுவையில் உள்ள வரி வருமானங்களை முறையாக கண்காணித்து வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், மாநகர சபை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த நுவரெலியா மாநகர சபை முதல்வர்:
பொதுமக்களுக்குத் தடையின்றி தரமானதும் சுகாதாரமானதுமான குடிநீரை வழங்குவதே நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த நடவடிக்கையினால் நுவரெலியா மாநகர சபைக்கு எவ்வித நிதி இழப்பும் ஏற்படாது எனவும், பொதுமக்களுக்கு ஆரோக்கியமானதும் தரமானதுமான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்கள்: ஆர்.எப்.எம்.சுஹெல், எஸ். கெளசல்யா
