தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறுகிறது.
நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுகிறது.
இம்முறை மொத்தமாக 294,089 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் பரீட்சை எழுதுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் பதற்றமின்றி பரீட்சைக்கு முகங்கொடுக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மையங்களைச் சென்றடைய வேண்டும்.
பரீட்சை காலை 9.30 இற்குத் தொடங்கும் என்ற போதிலும், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கே தமக்கான இடங்களில் அமர்ந்திருக்க வேண்டும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேதெரிவித்துள்ளார்.
காலை 9.30 முதல் 10.45 மணி வரை நடைபெறும் சிறிய இடைவேளைக்குப் பிறகு, முற்பகல் 11.15 முதல் நண்பகல் 12.15 மணி வரை நடைபெறும்.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் வினாத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல்களைக் கவனமாக வாசித்து, தங்களது பரீட்சை சுட்டெண்ணை (Index Number) சரியாகக் குறிப்பிட வேண்டும். விடைகளைத் தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே எழுத வேண்டும்.
கைப்பேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது எந்தவோர் இலத்திரனியல் சாதனத்தையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வரக் கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது.
