காணாமற்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, காணாமல் போன மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
இந்த நடவடிக்கைக்காக விமானப்படையின் பெல் 412 ரக ஹெலிக்கொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று (31) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைக்குச் சென்ற டிங்கி படகொன்று விபத்துக்குள்ளானமை, மற்றொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து காணாமற்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
விபத்துக்குள்ளான ஒரு படகில் இருந்த மீனவர் ஒருவரின் சடலம் நீர்கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நிலையில், மேலும் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்களையும் படகுகளையும் தேடும் பணிக்காக கடற்படையின் டோரா படகு, விசேட சுழியோடிகள் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வான்,கடல் மார்க்கமாக தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எஸ். ஆர். இரவீந்திரன்
