கல்வி என்பது வெறும் பாடப்புத்தக அறிவை வழங்கும் செயலாக மட்டும் கருதப்பட முடியாது. குறிப்பாக, ஆரம்பப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சியில் அவர்கள் கற்றுக் கொள்வது வெறும் பாட அறிவை மட்டுமல்ல; அது அவர்களின் நடத்தை, மனப்பாங்கு, தனித்திறன் மற்றும் சமூக உறவுகளையும் உள்ளடக்கியதாகும்.
ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சி என்பது தனிநபர் அனுபவங்களாலும், அவர்கள் வாழும் சமூகச் சூழலாலும் உருவாகிறது. எனவே, கல்விச் செயல்முறையானது தனிநபர் மற்றும் சமூக அம்சங்களை ஒருங்கிணைக்கும் வகையில் அமைய வேண்டியது அவசியமாகிறது.
இக்கருத்தை பல கல்வியியல் அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவர்களுள் முதன்மையானவரான ஜீன் பியாஜே (Jean Piaget) அவர்களின் அறிவுசார் கற்றல் உருவாக்கக் கோட்பாட்டின்படி, குழந்தைகள் தங்கள் சுய அனுபவங்களின் மூலம் அறிவைக் கட்டியெழுப்புகின்றனர்.
பியாஜேயின் கூற்றுப்படி, “குழந்தை ஒரு செயலில் ஈடுபட்டு கற்கும் ஆற்றல்மிக்க கற்றலாளர் (Active Learner)”.
இயற்கையிலேயே குழந்தைகள் உலகைப் புரிந்துகொள்ளும் ஆர்வத்துடனும், தேடல் குணம் கொண்ட அறிஞர்களாகவும் பிறக்கிறார்கள். இவர்கள் உலகை விளங்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடும்போது, இவர்களது மூளையானது ஒரு குறிப்பிட்ட ‘அறிதிறன் கட்டமைப்பு’ (Schema) ஏற்படுத்துகிறது. இக்கட்டமைப்பு மூன்று முக்கிய படிநிலைகளின் ஊடாக நிகழ்கிறது:
- தன்வயமாக்கல் அல்லது உட்கிரகித்தல் (Assimilation): ஏற்கனவே உள்ள அறிதிறன் கட்டமைப்பில், புதிய அனுபவங்களை அப்படியே இணைத்துக் கொள்வதை ‘தன்வயமாக்கல்’ என்கிறோம்.
உதாரணமாக: நாய் பற்றிய அறிவை ஏற்கனவே பெற்றிருக்கும் ஒரு குழந்தை, முதன்முதலாக ஒரு பூனையைப் பார்க்கும்போது அதன் நான்கு கால்கள் மற்றும் வடிவத்தை வைத்து அதனையும் “நாய்” என்று அழைக்கும். அதாவது, தன் முன்னைய அனுபவத்தை புதிய நிகழ்விற்கும் அது பயன்படுத்துகிறது.
- தன்அமைவாக்கல் அல்லது இணங்குவித்தல் (Accommodation): ஏற்கனவே உள்ள அறிதிறன் கட்டமைப்பு, புதிய அனுபவங்களின் வாயிலாக மாற்றம் பெற்று விரிவடைவதை ‘தன்அமைவாக்கல்’ என்கிறோம்.
உதாரணமாக: அணிலைப் பார்க்கும் ஒரு குழந்தை, ஆரம்பத்தில் அதனைப் “பூனைக்குட்டி” என்று அழைக்கலாம். ஆனால், பின்னர் அவற்றிற்கிடையே காணப்படும் உருவம், நகரும் வேகம், மரத்தில் ஏறும் விதம், பஞ்சு போன்ற வால் ஆகியவற்றைக் கவனித்துத் தன் தவற்றைத் திருத்திக் கொள்கிறது. இதன் மூலம் “அணில்” என்ற புதிய அறிதிறன் கட்டமைப்பு அக்குழந்தையின் மனத்தில் ஏற்படுகிறது.
- சமநிலைப்படுத்துதல் (Equilibration): இது தன்வயமாக்கல் (Assimilation) மற்றும் தன்அமைவாக்கல் (Accommodation) ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட, மனத்தைத் திருப்திப்படுத்தும் ஒரு சமநிலையாகும்.
புதிய அனுபவங்களால் ஏற்படும் குழப்பங்களைத் தீர்த்து, அறிவை நிலைநிறுத்த இந்நிலை உதவுகிறது. பியாஜே, குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை நான்கு முக்கிய கட்டங்களாகப் பிரிக்கின்றார்:
- புலனியக்கப் பருவம் (Sensory-Motor Stage): பிறப்பு முதல் 2 வயது வரை.
- தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவம் (Pre-Operational Stage): 2 வயது முதல் 7 வயது வரை.
- தூல சிந்தனைப் பருவம் (Concrete Operational Stage): 7 வயது முதல் 11 வயது வரை.
- நியம சிந்தனைப் பருவம் (Formal Operational Stage): 11 வயது முதல் கட்டிளமைப் பருவம் (Adolescence) வரை.
இந்த நான்கு பருவங்களில் ‘தூல சிந்தனைப் பருவத்தை’ நோக்குகையில், பிள்ளைகளின் அறிதிறன் விருத்தியானது ஒரு முக்கிய திருப்புமுனையைப் பெறுகிறது.
இக்காலகட்டம் தர்க்கரீதியான செயல்பாட்டுச் சிந்தனையின் ஆரம்பமாகும். இப்பருவம் முறையான பாடசாலைக் கல்விப் பருவம் என்பதால், குழந்தைகள் தர்க்கரீதியான சிந்தனைப் பிரயோகங்களை வெளிப்படுத்தத் தொடங்குவர்.
இப்பருவத்தில் பிள்ளைகள் முறையான கல்வியைப் பெறுவதால், வகுப்பறை அனுபவங்கள் மூலம் தங்களுடைய தவறான எண்ணக்கருக்களைத் (Misconceptions) திருத்தி, துல்லியமாக அமைக்கவும், பிறருடன் இணைந்து செயல்படும் கூட்டுறவுத் தன்மையை (Cooperation) வளர்க்கவும் வாய்ப்பு அமைகிறது.
இதன் அர்த்தம், பிள்ளைகள் கற்பனை உலகிலிருந்து விடுபட்டு, யதார்த்தத்தைப் புரிந்து சிந்திக்கத் தொடங்குகின்றனர் என்பதாகும்.
ஆரம்பக் கல்வி ஆசிரியரானவர் கற்றலை வழிநடத்தும் ஒரு முக்கிய நபராக (Facilitator) இருக்க வேண்டும். ஆரம்பக் கல்வி மாணவர்களின் கற்றல் முறையானது கண்டுபிடித்துக் கற்றல் (Discovery Learning) மற்றும் பகுத்தாராய்தல் போன்ற நவீன கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
அத்துடன் தனிநபர் கற்றல் தேவைகளை மதித்தல், நெகிழ்ச்சித்தன்மை கொண்ட பாடத்திட்டம் (Flexible Curriculum), விளையாட்டு முறை கற்றல் (Play-way Method) மற்றும் சூழல் பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகளின் இத்தகைய இயல்பான அறிவுசார் விருத்தியினை அடிப்படையாகக் கொண்டுதான் கற்பிக்க வேண்டும் என்ற விடயத்தை ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
வகுப்பறை கற்றலானது முழுமையாக மாணவர் மையப்படுத்தியதாக (Student-Centered) இருக்க வேண்டும். மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை உணர்ந்து அவற்றுக்குத் தீர்வுகாண ஆசிரியர் உதவ வேண்டும்.
அதுமட்டுமன்றி, கற்றல் செயல்பாடுகளில் அவர்களின் கவனத்தை ஈர்த்தல், பன்முகச் சிந்தனைக்கான (Divergent Thinking) களத்தை உருவாக்குதல், தனியாகவும் குழுவாகவும் செயல்படத் தூண்டுதல், சிக்கல்களை இனம் கண்டு அதனைத் தீர்க்கும் திறனை (Problem Solving Skills) ஊக்குவித்தல் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் திறமைக்கு அமைவான செயல்பாடுகளை வழங்குதல் என்பன ஆசிரியரின் முதன்மைப் பணிகளாகும். இதன் மூலம் மாணவர்கள் பல்திறன் வாய்ந்தவர்களாகவும் செயலுக்கம் உடையவர்களாகவும் வளர்த்தெடுக்கப்படுவர்.
பியாஜேயைப் போன்றே, லேவ் விகாட்ஸ்கி (Lev Vygotsky) அவர்களின் சமூகக் கட்டமைப்பு கோட்பாடும் ஆரம்பக் கல்விக்கு மிக முக்கியமானது. கற்றலானது சமூகத் தொடர்புகளின் (Social Interactions) மூலம் மேம்படுகிறது என்பதை இக்கோட்பாடு வலியுறுத்துகிறது.
பியாஜே, விகாட்ஸ்கி ஆகிய இருவரின் கோட்பாடுகளும் குழந்தையின் வளர்ச்சியில் தனிநபர் மற்றும் சமூகக் காரணிகள் இணைந்து செயல்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
சமூகக் கட்டமைப்பு கோட்பாட்டின்படி, கற்றல் என்பது ஒரு சமூகச் செயல்முறையாகும். விகாட்ஸ்கி கூறியபடி, “கற்றல் என்பது அடிப்படையில் ஒரு சமூக ஈடுபாடு கொண்ட செயல்முறையாகும்” (Learning is a fundamentally socially mediated process). இவரின் முக்கிய கருத்தாக்கம் என்னவென்றால், ஒரு குழந்தையால் தனியாகச் செய்ய முடியாத ஒரு செயலை, தன்னை விட அறிவில் முதிர்ந்த பிறரின் உதவியுடன் செய்து முடிக்க முடியும் என்பதாகும்.
உதாரணமாக: ஒரு மாணவரால் ஒரு கணக்கைத் தனியாகச் செய்ய முடியாமல் போகலாம். ஆனால், ஆசிரியர் அல்லது சக நண்பர்களின் (More Knowledgeable Other – MKO) உதவியுடனும் வழிகாட்டலுடனும் அதனை எளிதாகக் கற்றுக் கொள்கிறார்.
விகாட்ஸ்கி தனது ‘மைண்ட் இன் சொசைட்டி’ (Mind in Society) என்ற நூலில் இதைக் குறிப்பிடும்போது: “ஒரு குழந்தையால் இன்று பிறரின் உதவியுடன் என்ன செய்ய முடிகிறதோ, அதை நாளை அக்குழந்தையால் தனியாகச் செய்ய முடியும்” (What a child can do today with help, she will be able to do by herself tomorrow) என்கிறார்.
குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கும் இன்றியமையாததாகும். ஆல்பர்ட் பண்டுரா (Albert Bandura) தனது சமூகக் கற்றல் கோட்பாட்டில், “குழந்தைகள் பிறரைக் கவனிப்பதன் மூலம் கற்றுக் கொள்கிறார்கள்” (Children learn by observing others) என்கிறார்.
கற்றலில் கவனிப்பும் பின்பற்றுதலும் முக்கிய பங்கு வகிப்பதால், பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும். குழந்தைகளுடன் நன்றாக உரையாடி, அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களையும் ஒழுக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பியாஜேயின் தனிநபர் சார்ந்த அறிவு உருவாக்கமும் விகாட்ஸ்கியின் சமூகக் கற்றல் கோட்பாடும் பண்டுராவின் கவனிப்புக் கற்றலும் இணையும் போது ஆரம்பக் கல்வி முழுமையடைகிறது.
பள்ளி, இல்லம் ,சமூகம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படும் போது, மாணவர்கள் பன்முகத் திறன்களுடன் சிறந்த சமூகப் பங்களிப்பாளர்களாக உருவெடுப்பார்கள்.

திருமதி கே.சிவராஜா (B.A,PGDE)
MED 2026 (Sliit)
கொழும்பு இந்துக் கல்லூரி
