நீரில் மூழ்கிய மாணவியை காப்பாற்ற சென்ற ஆசிரியர் மரணம்!

மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்புறை, வைகும்புறை தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கடலில் மூழ்கிக்கொண்டிருந்த மாணவி ஒருவரைக் காப்பாற்ற முயன்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

படல்கும்புறை, அலுபொத்தை, பிலிமலை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான என். எம். எம். நுஜூம் (56 வயது) என்ற கணித ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தப் பரிதாபச் சம்பவம் நேற்று திங்கள் மே 25 இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் அதிபர், சில ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுடன் கல்விச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்தபோது, மாலை 4.30 அளவில் கிரிந்தை (Kirinda) கடற்கரைக்குச் சென்று கடலில் நீராடியுள்ளனர்.

அப்போதே மாணவி ஒருவர் நீரில் மூழ்கியிருக்கிறார். அதனைக் கண்ட ஆசிரியர் மாணவியைக் காப்பாற்றச் சென்றபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உயிர்காக்கும் பிரிவினரும் (Life Guards) பிரதேசவாசிகளும் இணைந்து அவர்கள் இருவரையும் மீட்டு, தெபரவெவை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் சிகிச்சை பலனின்றி ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கிரிந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கௌசல்யா