அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுக நிகழ்வின்போது இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பான தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வின்போது, அங்கு வருகை தந்திருந்த மீனவ சமூகத்தினர் சிலர் தமது தொழில் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகத் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே மற்றும் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித்த கமல் ஜினதாச ஆகியோர் உடனடியாகச் செயற்பட்டு, சம்பந்தப்பட்ட மீனவப் பிரதிநிதிகளை அங்கிருந்த அலுவலகத்திற்கு அன்புடன் அழைத்து அவர்களுடன் நேரடியானதும் சுமுகமானதுமான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர்.
இதன்போது மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளை மிகவும் கவனத்துடன் கேட்டறிந்த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர், அவற்றிற்குரிய உரிய தீர்வுகளை விரைவாக வழங்குவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
இருப்பினும், குறித்த நிகழ்வு தொடர்பாகச் சில ஊடகங்களில் மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்திய ஆரம்பகட்டக் காட்சிகள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் மீனவர்களுடன் மேற்கொண்ட ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் முழுமையாகப் பொதுமக்களைச் சென்றடையவில்லை.
எந்தவொரு சம்பவத்தையும் பொதுமக்களுக்குக் கொண்டு செல்லும்போது, இரு தரப்பினரதும் கருத்துகளையும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீர்வு நடவடிக்கைகளையும் சமநிலையுடன் வெளிப்படுத்துவது மக்களுக்குச் சரியான புரிதலை வழங்கும் என நாம் நம்புகின்றோம்.
மீனவ சமூகத்தின் நலன் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை இதன் மூலம் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.(mathemurasu.lk)
க.கிஷாந்தன்,
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரின் ஊடக செயலாளர்
