அன்றாட வாழ்வில் ‘எல்லோருக்கும் வணக்கம்’ என்பது அதிகம் பயன்படுத்தும் ஒரு சொற்றொடர். சிலர், “எல்லாருக்கும்’ என்றும்; சிலர் “எல்லோருக்கும்’ என்றும் சொல்கிறார்கள். இரண்டில் எது சரி?
நண்பர் ஒருவர் தன் பிள்ளைக்குத் தமிழில் பெயர்சூட்ட விரும்பி, “நல்லான்’ எனச் சூட்டினார். இப்பெயர் குறித்து தமிழாசிரியர் ஒருவருடன் கலந்துரையாடுகையில், “நல்லான் என்பது நல்லோன் என்றே வரும்’ எனத் திருத்தியிருக்கிறார்.
“ஆ ஓ ஆகலும் செய்யுளில் உரித்தே’ என்னும் இலக்கணப்படி செய்யுளில் நல்லான் என்பது நல்லோன் என்றே வரும். இதன்படி நல்லான் – நல்லோன்; வில்லான் – வில்லோன்; எல்லாரும் – எல்லோரும், சரியானவை!
எல்லா, எல்லோரும், எல்லாமே என்பதற்குக் காரணமான “எல்’ என்பது ஆதியில் தோன்றிய தமிழ்ச்சொல். இச்சொல் தமிழ் காலத்தையொட்டிய கிரேக்க மொழியிலும் உள்ளது. அம்மொழியிலும், “எல்’ என்பது சூரியனையே குறிக்கிறது!
கிரேக்கர்களின் காவல் கடவுள் “எல்’. கிரேக்கர்கள் தங்களை “எல்லனிக் கிரிஸ்’ என அழைத்துக் கொள்கிறார்கள். அதாவது சூரியக் குழந்தைகள்.
இந்தியாவில், புராணக் கதைகளில் சூரியக் குலத்தவர்கள் உண்டு. எல், என்கிற சொல்லே ஆங்கிலத்தில் அல், ஆல் என மருவியுள்ளது.
எல்லோரும், எல்லோருக்கும் என்பதில் ஆறறிவு இருப்பதாக சொல்லிக்கொள்ளும் மனிதர்கள் மட்டுமல்ல, மனிதனுக்கு முன்பு தோன்றிய அனைத்து உயிர்களும் இருக்கின்றன. இதையேதான் தாயுமானவர்,
“எல்லோரும் இன்புற்றிருக்க’
எனப் பாடியிருக்கிறார்!
மூதுரை பாடலில், “எல்லாருக்கும் பெய்யும் மழை’ (10) என்கிறார் ஒளவையார்
- இதயநிலா சுகன்ஜி
