நீதிமன்றத் தீர்ப்புககு அப்பால் எந்தத் தீர்வையும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும்
நீதிமன்றப் பொறிமுறையினால் வழங்கப்படும் தீர்மானங்களே நாட்டின் சட்டம் தொடர்பான மிகச் சரியான இறுதித் தீர்மானங்களாகும் எனவும், அந்த அனைத்துத் தீர்மானங்களுக்கும் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் முழுமையாகக் கட்டுப்படுவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டப் பெண்கள் மாநாட்டில் இன்று (18) கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளுக்கு அப்பால் தம்மிடமிருந்து வேறு தீர்மானங்களை எவரும் எதிர்பார்க்க வேண்டாம் என வலியுறுத்திய ஜனாதிபதி, நாட்டின் சட்டத்தின் இறுதி விசாரணையைக் கோருவது நீதிமன்றமே எனவும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கிய பின்னர் அதனை நீக்குமாறு கோரி கூச்சலிடுவதால் எந்தப் பயனும் இல்லை எனவும், அவ்வாறான செயற்பாடுகள் மூலம் சட்டத்தின் ஆட்சியைப் பேண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டத்தைச் செயற்படுத்துவதற்கான முழுமையான அதிகாரம் உரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சட்டத்தின் சமத்துவம் இல்லாத நாட்டில் எதிர்கால சந்ததிக்குப் பாதுகாப்பு இருக்க முடியாது என்றார்.
சட்டம் எல்லோருக்கு முன்பும் சமமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதுவரை காலமும் தமக்குச் சட்டம் செயற்படுத்தப்படாது எனச் சிந்தித்து வந்தவர்கள் மீதும் தற்போது சட்டம் சமமாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, உலகின் வலிமையான தொழிலாளர் சந்தைக்கு ஏற்ற வகையில் ஆக்கபூர்வமான பிள்ளைகளை உருவாக்குவதற்காகப் பழைய ஏகபோகக் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காகப் பாடசாலைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு, எதிர்காலத்தில் அந்த நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
அதற்கமைய, 6,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் (Fiber) தொழில்நுட்ப இணைப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டம் வீழ்ச்சியடைந்தமையின் விளைவாகவே நாட்டில் போதைப்பொருளும் பாதாள உலகக் செயற்பாடுகளும் இதுவரை காலமும் விரிவடைந்தனவென்றும், அரசியல் பாதுகாப்பின் ஊடாகவே அவை பேணப்பட்டு வந்தனவென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தமது அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எவ்வித இடமும் வழங்கப்பட மாட்டாது எனவும், போதைப்பொருளையும் பாதாள உலகத்தையும் வேரறுப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் அவர் உறுதியளித்தார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் ஊடாக, 2,484 கிலோகிராம் ஹெரோயின், 3,301 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 297 கிலோகிராம் கொக்கெய்ன் என்பன பொலிஸாரின் பொறுப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
அத்துடன், 93 ரி-56 (T-56) ரகத் துப்பாக்கிகள், 141 கைத்துப்பாக்கிகள் மற்றும் 105 ரிவோல்வர்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நாட்டை எதிர்கால சந்ததிக்குப் பாதுகாப்பான இடமாக மாற்ற வேண்டுமானால் போதைப்பொருளும் பாதாள உலகமும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு சதித்திட்டத்திற்கும் பலியாகாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இன அல்லது மதவாதத்துக்கு இடமளிக்காமல் தேசிய நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட நாடொன்று கட்டியெழுப்பப்படும் என்றார்.
மேலும், பொதுச் சொத்துகளைச் சுருட்டியவர்கள் மற்றும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகச் சட்டம் கடுமையாகச் செயற்படுத்தப்படும் எனவும், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுவதுடன், சதித்திட்ட சக்திகளுக்கு நாட்டை நாசமாக்க எக்காலத்திலும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கடுமையாக எச்சரித்தார்.
