நீண்ட தூர இலக்குகளைத் தாக்கும் டிரோன்: இந்தியா சோதனை

நீண்ட தூர இலக்குகளைத் தாக்கும் ஆளில்லா வானூர்தி; வெற்றிகரமாகச் சோதித்தது இந்தியா

இந்தியத் தற்காப்புத் தொழில்நுட்பத்தில் மற்றொரு வரலாற்றுச் சாதனையாக, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘கல்’ (KAL) என்ற நீண்டதூர ஒருவழித் தாக்குதல் ஆளில்லா வானூர்தியை (டிரோன்) அந்நாடு வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் களப் பயிற்சித் தளத்தில் அச்சோதனை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நொய்டா பகுதியில் இயங்கும் ‘ஐஜி டிஃபென்ஸ்’ என்ற நிறுவனம், இந்த நவீன ஆளில்லா வானூர்தியை முழுமையாக உருவாக்கியுள்ளது.

அதிகபட்சமாக 1,000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ‘கல்’ ஆளில்லா வானூர்தி, தொடர்ந்து ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை வானில் பறக்கும் ஆற்றல் கொண்டது.

மேலும், கடல் மட்டத்திலிருந்து 5,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் வல்லமை கொண்ட இந்த ஆளில்லா வானூர்தி, 50 கிலோ எடை கொண்ட வெடிபொருள்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதிரிகளின் ரேடார்கள், வான் பாதுகாப்பு மண்டலங்களைத் தாமே கண்டறிந்து அதன் இலக்குகளைத் தாக்கி அழிக்கும். ஷ்யா, உக்ரேன் போர், மத்திய கிழக்கு மோதல்களில் ஈரான் தயாரிப்பான ‘ஷாஹேத்-136’ போன்ற குறைந்த செலவிலான நீண்டதூர தாக்குதல் ஆளில்லா வானூர்திகள் போரின் போக்கையே மாற்றியமைத்துள்ளன.

அந்த வகையில், இந்திய எல்லைப் பாதுகாப்புக்கும் எதிரிநாடுகளின் முக்கியமான கட்டமைப்பு, ரேடார், வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தகர்க்கவும் இந்த ‘கல்’ ஆளில்லா வானூர்தி முக்கியப் பங்காற்றும் என ஐஜிடி டிஃபென்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி போதிசத்வா சங்கப்பிரியா தெரிவித்துள்ளார்.