இடைத்தேர்தலுக்காக முதல்வர் விஜய் 4 நாள்கள் பிரசாரம்

இடைத்தேர்தலுக்காக முதல்வர் விஜய் 4 நாள்கள் பிரசாரம் செய்கிறார்.

மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு அதிமுக எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர்.

இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளை தவிர, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தவெக கட்சியைச் சேர்ந்த கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இருவரையும் ஆதரித்து முதல்வரும் தவெக தலைவருமான விஜய் விரைவில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

தாராபுரத்தில் 2 நாள்களும், மதுராந்தகத்தில் 2 நாள்களும் முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த தேதியில் பிரசாரம் மேற்கொள்ளப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.