2026 க.பொ.த உயர் தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த உயர் தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது.

2026 கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகிறது.

இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவோர் மின்னணு சாதனத்தையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பரீட்சை விதிமுறைகளுக்கு அமைய செயற்பட்டுப் பரீட்சை மோசடிகளைத் தவிர்குமாறும் கடந்த வருடங்களிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க பரீட்சைத் திணைக்களம் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.