காஸா தொடர்பான டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை இஸரேல் நிராகரிப்பு

டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸாவுக்கான 15 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிடும் வரை காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் நடவடிக்கை மற்றும் இஸ்ரேலியப் படைகள் வெளியேறும் நடவடிக்கைகளின் வரிசைமுறை தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறும் வரை ஆயுதங்களைக் கைவிட முடியாது என ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையில், ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட்டு, காஸா இராணுவமயமற்ற பகுதியாக மாற்றப்பட்ட பின்னரே தமது படைகளைத் திரும்பப் பெற முடியும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகின்றது.

ட்ரம்பின் விரிவான காஸா அமைதி திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடன் இஸ்ரேல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்மொழியப்பட்டுள்ள சில விடயங்கள் இஸ்ரேலுக்கு ஏற்புடையதாக உள்ளதாகவும், சில விடயங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸாவுக்கான திட்டத்தில் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் ஆயுதக் களைவு, இஸ்ரேலியப் படைகளின் வெளியேற்றம், காஸாவின் மறுகட்டமைப்பு மற்றும் பாலஸ்தீனிய குடிமை நிர்வாகத்தின் கீழ் ஆட்சி உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் இரு தரப்பினரும் தொடர்ந்து பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.