திறைசேரி அதிகாரியின் மரணம் குறித்துப் புலன் விசாரணை!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த திறைசேரியின் வெளிவளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

குளியாப்பிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறப் பகுதியில், இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. உடலில் வெட்டுக் காயம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. ஆகவே, அவர் கொல்லப்பட்டாரா, தற்கொலை செய்துகொண்டாரா? என்பதைக் கண்டுபிடிக்க பொலிஸார் துருவித்தேடி வருகின்றனர்.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹெக்கர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இவருடன் சேர்த்து நான்கு அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்ய நிதி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

இந்தச்சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு இரண்டு தடவை இந்த அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் ஆஜராகவில்லை.. இந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளார்.