ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு எமனாகிய பிரியாணி!

நள்ளிரவு நேரத்தில் பிரியாணியும் தர்ப்பூசணியும் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மர்மமாக மரணமடைந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்னிரண்டு மணித்தியால இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக இளைய சகோதரி, மூத்த சகோதரி, தாய், தந்தையென மரணமடைந்ததாக என்டிரிவி தெரிவித்துள்ளது.

மும்பையில் அலைபேசி பாகங்கள் விற்பனை செய்யும் அப்துல்லா அப்துல் காதர் (40 வயது), அவர் மனைவி, பிள்ளைகள் இருவர் என நால்வரும் சனிக்கிழமை இரவு 10.30 அளவில் வெளி விருந்தொன்றில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

அதிகாலை ஒரு மணியளவில் தர்ப்பூசணி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்த அவர்களுக்குக் காலை ஐந்து மணிக்கு கடும் வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்படவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு இளைய மகள் காலை 10.30 இற்கு மரணமடைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது சகோதரியும் தாயும் உயிரிழந்துள்ளனர். இரவு 10.30 இற்குத் தந்தை இறந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மும்பை பபபொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.