இஸ்ரேல்-லெபனான் பத்து நாள் சண்டை நிறுத்தம் அமல்

பெய்ரூட்: இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்ட பத்து நாள் சண்டைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நடப்புக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முதல் சந்திப்புக்கு தாம் ஏற்பாடுசெய்துவருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – லெபனான் சண்டைநிறுத்தம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு முதல் (இலங்கை நேரம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 இற்கு அமலுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்ட அமெரிக்கா முயன்றுவரும் வேளையில், லெபனான்மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் கைவிட்டு சண்டைநிறுத்தத்திற்கு முன்வர வேண்டும் என டெஹ்ரான் வலியுறுத்தியது. உடன்பாட்டில் அதுவும் ஓர் அம்சமாகச் சேர்க்கப்பட வேண்டும் என்கிறது ஈரான்.

சண்டைநிறுத்தம் அமலுக்கு வந்த வேளையில், ஹிஸ்புல்லாவின் மையப்பகுதியான பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் ஒலித்ததாகவும் அது சண்டைநிறுத்தத்தைக் கொண்டாடுவதற்கான வெளிப்பாடாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இருப்பினும், அதனை உறுதிசெய்ய இயலவில்லை என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.