தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பொலிஸாருக்கு மரண தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 09 பொலிஸாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக 10 பொலிஸார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவர் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 பொலிஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த 23ஆம் திகதி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

பொலிஸ் நிலையத்தில் வைத்து இருவரும் பொலிஸ் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் அடைத்து வைத்து தாக்கியதை எளிதாக கருத முடியாது.

இருவரும் நிராயுதபாணியாக இருந்தபோதும், இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரிகள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்றவழக்கும் இல்லை என்றே தெரிகின்றது.

குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனை குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும். குற்றவாளிகள் நல்ல அறிவு வளர்ச்சி உள்ளவர்கள். படித்தவர்கள். இதை சாதாரண குற்றமாக கருத முடியாது.

பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது.

சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள். வேலியே பயிரை மேய்ந்ததுபோல அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

தந்தை, மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிருபணம் ஆகியுள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ, அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு பொலிஸார் செயல்பட்டுள்ளனர். இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.

ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸாரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர். பொலிஸ் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது.

குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும்.

வழக்கில் கைதுசெய்யப்பட்ட 9 பொலிஸாருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இப்படி செயல்படும் பொலிஸாருக்கு அச்சம் ஏற்படாது.

எனவே இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. மேலும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.15 இலட்சம் அபராதம் விதிக்கப்படுகின்றது. என அவர் கூறியுள்ளார்.தந்தை