அனர்த்த முகாமைத்துவத் துறைக்கெனப் பிரத்தியேகமான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை ஸ்தாபித்து, அதனை வலுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளார்.
குருநாகல் மாவட்டம், இப்பாகமுவ பகுதியில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“நாட்டில் துல்லியமான, திட்டவட்டமான, வினைத்திறனான அனர்த்த முகாமைத்துவத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவில்லை.
அவ்வாறு எதுவும் நடைமுறையில் இல்லை. அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் இன்று சுனாமிக்கு அகப்பட்டுப் போனது போன்ற நிலையிலேயே உள்ளது. அனர்த்த முகாமைத்துவத்திற்குத் தெளிவான நிறுவனக் கட்டமைப்போ, வழிகாட்டுதல் தத்துவங்களோ, செயற்பாடுகளோ அல்லது செயற்றிட்ட வரைபடமோ எதுவும் இல்லை.
நாட்டில் NBRO மற்றும் GSMB நிறுவனங்களைப் போலவே சூழல் பாதுகாப்பு, கட்டடங்கள், மண்சரிவுகள், வெள்ளம், சூறாவளி போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்கள், முறையான திட்டமிடலுடன் ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டும்.
ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவத் திட்டம் வகுக்கப்பட்டு தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் மட்டங்களிலும் இதன் பணிகளை முன்னெடுக்க வேண்டும். இதனைச் செயற்படுத்தத் தனி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை ஸ்தாபிக்க வேண்டும்.
இதன் கீழ், விசேட பயிற்சி பெற்ற கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
