கல்வி நிறுவனமே என் மகளைக் கொன்றது!

கல்வி நிறுவனமே என் மகளைக் கொன்றது! என்று கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தமது முன்னாள் பாடசாலையில் நடந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டித் தனியார் கல்வி நிறுவனத்தில் அவமானப்படுத்தியதைத் தம் மகள் ஜீரணிக்க முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்டதாக அந்தத் தாயார் கூறினார்.

இன்று செய்தியாளர் சந்திப்பொன்றில் அந்தத் தாயார் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

கல்வி நிறுவனமே என் மகளைக் கொன்றது. இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த என் மகள், தனது முன்னாள் பாடசாலையில் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

என் மகள் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறாள் என்று தகவல் கிடைத்ததும், நான் அவளை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன், அவர் அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உறுதிப்படுத்தினார்.

பின்னர் வைத்தியர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார், அதன் பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர்கள் எங்களிடமிருந்து ஓர் அறிக்கையைப் பதிவு செய்தனர். ஆனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அதுதான், ஏனென்றால் வேறு எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

என் மகளைப் பாதுகாப்பதில் மட்டும் நான் கவனம் செலுத்தியதால் நான் அதைப் பற்றிப் பார்க்கவில்லை,

மகளை, கொட்டாஞ்சேனையில் உள்ள வேறொரு பாடசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தோம். அங்கு ஆசிரியர்கள் அவளை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்.

இருப்பினும், சமீபத்தில் ஒரு தனியார் வகுப்பில் நடந்த ஒரு சம்பவம், அந்த நிறுவனத்தில் ஒரு நபர் மற்ற மாணவர்கள் முன்னிலையில் என் மகளை வெளிப்படையாக அவமானப்படுத்தியிருக்கிறார்.

மகள், ஒரு பொலிஸ் வழக்கில் சிக்கியிருப்பதாகக் கூறி, வகுப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியது, மகளை மன ரீதியாகப் பாதித்தது.

என் மகள் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து அனைவரும் அவளிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர். அவளை மோசமான முறையில் சித்திரித்து தகவல் பரப்பப்பட்டது.

தனியார் கல்வி நிறுவனத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகுதான் இந்த விவரங்கள் வெளிவந்தன.

தவறான தகவல்களைக் கூறி கல்வி நிறுவன அதிகாரி தன்னை அவமானப்படுத்தியதாக என் மகள் என்னிடம் அழுதாள். எந்தத் தவறும் செய்யாதபோது ஏன் தண்டிக்கப்படுகிறேன் என்று என் மகள் கேள்வி எழுப்பினார்,

எனது மகளால் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக பிணை வழங்கப்பட்டது. அவர் என் மகளின் முன்னாள் பாடசாலையில் தொடர்ந்து கற்பித்து வருகிறார் என்று விபரித்த அவர்,

பொலிஸ் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படவில்லை என்றும், கல்வி அமைச்சும் இது தொடர்பாக தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜோசப் ஸ்டாலின் :

ஊடக சந்திப்பில் உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்:

இந்த விஷயத்தில் தலையிடத் தவறியதற்காகக் கல்வி அமைச்சைக் கண்டிப்பதாகக் கூறினார்.

ஒரு சம்பவம் நடந்தால், கல்வி அமைச்சு தலையிட்டு விசாரணை செய்வது கட்டாயமாகும், ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில், அமைச்சு அவ்வாறு செய்யத் தவறிவிட்டது.

சம்பவம் ஓர் அரச பாடசாலையில் நடந்தது. தமிழ் பேசும் அதிகாரிகள் உள்ளனர். பல அரச பாடசாலை குழந்தைகளிடமிருந்து முறைப்பாடுகள் வந்தாலும், அவை விசாரிக்கப்படுவதில்லை.

அவர்கள் அதைச் செய்வதில்லை. ஒரு குழந்தை தனது உயிரை இழக்கும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள்,

கல்வி அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து பொலிஸாருடன் இணைந்து சம்பவங்களை விசாரித்திருந்தால், இந்த இறப்பைத் தடுத்திருக்க முடியும்.

அந்த மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்திய CTU பொதுச் செயலாளர்,

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மாஅதிபரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறினார்.

இதேவேளை, இந்தச் சம்பவத்தைக் கண்டித்துக் கொழும்பில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலர் மதிமுரசுவுக்குத் தெரிவித்தனர்.